நினைவுகளை அழிக்கும் அரசியல்
யுத்தம் மற்றும் இன அழிப்பில் ஈழத் தமிழனம் நினைவுகளை அழிக்கும் கொடிய அரசியலுக்கு முகம் கொடுத்துக் கொண்டிருக்கிறது.
இனத்தைக் கொல்லுவதைவிடவும் அதன் நினைவுகளைக் கொல்லுவது மிகவும் கொடியது. நினைவை அழித்தலை ஒரு இனம் தாங்கிக் கொள்ள முடியாத துயரத்தில் உழல்கிறது. ஈழத் தமிழ் இனம் கடந்த பல வருடங்களாக உயிர் அழிவைச் சந்திப்பதுடன் இந்த நினைவழிவையும் சந்தித்துக் கொண்டிருக்கிறது. இதனால் நினைவுகளில் பெரும் இடைவெளிகள் ஏற்பட்டிருக்கின்றன. இது உளவியல் ரீதியாகவும் உணர்வு ரீதியாகவும் இனத்தின் வேரை அழிக்கும் திட்டமிட்ட நடவடிக்கையாக மேற்கொள்ளப்படுகிறது. அரசியல் சாயத்தை பூசி மேற்கொள்ளும் இந்த விடயம் அதனைக் கடந்து பல வழிகளில் அழிவை நிகழ்த்துகிறது. முக்கியமாக உளவியல் ரீதியாக சாதாரணமான மக்களை பாதிக்கிறது.
சென்னைப் பல்கலைக்கழக இதழியல் துறையில் நடந்த ஒரு கருத்தரங்கில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பேராசிரியரும் கவிஞருமான பா. அகிலன் ஞாபகங்களை அழிக்கும் அரசியல் குறித்துப்; பேசியிருந்தார். பா. அகிலனின் கவிதைகளிலும் அவரது ஈடுபாடுகளிலும் ஞாபகங்களை நேசிப்பதும் அவற்றை இழக்கும் தருணத்தில் ஏற்படும் வலிகளும் தெரிகின்றன. நுண்கலைத்துறைப் பேராசிரியர் என்ற வகையில் வரலாற்றிலும் பண்பாட்டிலும் ஏற்படும் இல்லாமல் போதல்களையும் கவிஞர் என்ற ரீதியில் மனித உணர்வுகளில் உண்டாகும் காயங்களையும் அவர் விபரித்திருந்தார். ஞாபகங்களை அழிக்கும் அரசியல் என்பது வெறும் அரசியல் சார்ந்த விடயம் என்பதற்கு அப்பால் அது வாழ்க்க்கை காயப்படுத்தும் தந்திரமாகவும் வரலாற்றை அழித்து அதன் தடையங்களை குழப்பும் சூழ்ச்சியாகவும் எல்லாவற்றையும்விட இருப்பை இல்லாமல் செய்யும் நேரடியான நடவடிக்கையாகவும் நிகழ்த்தப்படுகிறது.
அண்மையில் திருகோணமலையில் தந்தை செல்வா அவர்களின் சிலையை இனந்தெரியாத மர்ம நபர்கள் என்ற போர்வையில் யாரோ இத்தகைய நோக்கங்களுக்காக தலையை கொய்துள்ளார்கள். இதை தந்தை செல்வாவின் திலையை சிதைத்தார்கள் என்பதைவிட ‘தலையை எடுத்துள்ளார்கள்’ என்றே அடையாளப்படுத்த வேண்டியிருக்கிறது. ஈழத்தமிழர்களின் வாழ்விலும் வரலாற்றிலும் தந்தை செல்வா முக்கியமானவர். அவர் அடக்கி ஒடுக்கப்பட்ட சிறுபான்மையினங்களின் உரிமைப் போராட்டத்தை ஆரம்பித்து அதன் வரலாற்று உணர்வில் பரிமாணங்களுக்கு வித்திட்டவர். எனவே தந்தை செல்வாவின் தடையம் என்பது ஈழத் தமிழர்களின் வரலாற்றில் முக்கிய குறியீடாகிறது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகளை நடத்தி எந்த முடிவையும் பெறாத நிலையில் சில சர்வதேச சக்திகளுடன் பேசிக் கொண்டிருக்கிறது. சர்வேச சக்திகளுடன் கூட்டமைப்பு பேசுவதை அரசாங்கம் விரும்பவில்லை என்பதை வெளிப்படையாகவும் எச்சரிக்கையாகவும் அரசாங்கமே வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறது. இன்றைய ஈழத் தமிழர்களின் அரசியலின் இன்றைய ஜனநாயக நடவடிக்கையை கூட்டமைப்பு முன்னெடுக்கிறது. கூட்டமைப்பு முதல் ஈழத் தமிழர்களின் அரசியல் முழுமைவரை உருவாக்கத்தில் அவரது பங்கிருக்கிறது.
தந்தை செல்வாசிலை தாக்குதல் நடவடிக்கையை யார் செய்திருப்பார்கள் என்பதையும் போர் முடிந்த பின்னர் தொடர்ச்சியாக எவ்விதமான நடவடிக்கைகள் நடக்கின்றன என்பதயையும் நமது மக்கள் சாதாரணமாக புரிந்து கொள்வார்ரகள். பிரதானமாக ஒரு அரசியல் நடவடிக்கையாகவும் உள்முகமாக இனத்தின் அடையாளங்களை அழிக்கும் தொடர்ச்சியாகவும் நடந்துள்ள தந்தை செல்வாவின் சிலைமீதான தாக்குதல் ஞாபகங்களை அழிக்கும் அரசியலின் தொடர்ச்சியாகவே நடந்திருக்கிறது. இன்றைய ஈழம் என்பது நினைவுகளை அதிகமதிகம் இழந்து போயிருக்கிறது. இன்றைய ஈழத்து மக்கள் தங்கள் நினைவுகளை அதிகமதிகம் இழந்து போயிருக்கிறார்கள்.
1981இல் யாழ் நூலகம் அழிக்கப்பட்டது நினைவுசசுவடுகளை அழிக்கும் மிகப் பயங்கரமான நிகழ்வாக நடத்தப்பட்டது. அன்றைய ஐக்கிய தேசியக் கட்சி ஜே.ஆர்.ஜெயவர்த்தன அரசாங்கம் லட்சக்கணக்கான அரிய நூல்களுடன் யாழ் நூலகத்தை எரித்து சாம்பலாக்கியது. தேர்தல் தோல்வி காரணமாக அதாவது அரசியல் பழி வாங்கல் காரணமாக ஈழத் தமிழர்களைப் பழி வாங்க அன்று இனவாதிகள் யாழ் நூலகத்தை எரித்து அழித்தார்கள். அதன் மூலம் தமிழ் மக்களின் இருப்பையும் அடையாளங்களையும் இல்லாமல் செய்யவே அவர்கள் திட்டமிட்டிருக்கிறார்கள்.
போரின் பொழுது மக்கள் அழிக்கப்படுவதுடன் மக்களின் வரலாறும் அடையாளங்களும் வாழ்வும் பண்பாடும் நிரம்பிய நினைவுச் சின்னங்களும் அழிக்கப்படுகின்றன. படையெடுப்பவர்கள் மக்களுடன் அவர்கள் வாழ்ந்த கிராமங்களையும் நகரங்களையும் அங்குள்ள தொன்மை மிகுந்த பொருட்களையும் அழித்து விடுகிறார்கள். ஈழத்தில் இலங்கை இராணுவத்தினர் நிலப் பகுதிகளைப் கைப்பற்றும் பொழுது அங்குள்ள நினைவுச் சின்னங்களையும் அழித்து விடுகிறார்கள்.
யாழ்ப்பாணத்தை 1996இல் கைப்பற்றிய பொழுது நல்லூரில் நிறுவப்பட்டிருந்த தியாகி திலீபனின் நினைவுத் தூபியை படையினர் அழித்திருந்தார்கள். அப்பொழுது யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளிலும் உள்ள நினைவு இடங்களை படையினர் சிதைத்திருந்தார்கள். ஈழத் தமிழ் மக்களின் பண்பாட்டுடனும் வரலாற்றுடனும் சமகாலப் போராட்டத்துடனும் தொடர்புடைய நினைவுகள் அழிக்கப்பட்டிருந்தன. மக்களின் மனதில் படிந்துள்ள நினைவுகளையும் சமகால வாழ்வில் ஏற்படும் உணர்வையும் அழிக்க இவ்வாறான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இவை எந்த நோக்கத்திற்காக அழிக்கப்படுகின்றதோ அந்த நோக்கத்திற்கு எதிர்மாறான உணர்வு இதனால் பெருக்கெடுக்குமே தவிர அந்த நினைவை அழித்துவிட முடிவதில்லை. அதாவது நினைவுச் சின்னங்கள் சிதைக்கப்படுகையில் மனதில் படிந்திருக்கும் நினைவுகள்தான் கிளறிவிடப்படுகின்றன.
ஈழம் என்கிற நிலப்பகுதி ஈழத் தமிழர்களின் வரலாறும் பண்பாடும் வாழ்வியல் கோலங்களின் நினைவுத் தடயங்களாய் பொதிந்து கிடக்கும் பூமி. அதனால் தொடர்ச்சியாக ஈழத் தமிழர்களின் அரசியலை அழிக்க முற்படுவர்கள் எதையெல்லாம் அழிக்கலாம் என்றே தேடிக் கொண்டிருக்கிறார்கள். காலம் காலமாக வாழ்ந்தமைக்கான தடயங்களும் சமகால போராட்டத்தின் தடயங்களும் வாழ்வையும் அரசியலையும் கோரிக் கொண்டிருக்கின்றன. நான்காம் ஈழப் போரில் வன்னிப்போரின் பின்னர் வன்னியில் பல நினைவுச் சின்னங்கள் அழிக்கப்பட்டன.
போரால் வன்னியின் ஒட்டுமொத்த அடையாளமும் அழிக்கப்பட்டது. குறிப்பாக நகரங்களும் கிராமங்களும் தெருக்களும் அவ்வகையில் சிதைக்கப்பட்டன. போர் நடைபெறாத கிளிநொச்சி போன்ற நகரங்கள் இராணுவத்தால் கைப்பற்றப்பட்ட பின்னதாக சிதைக்கப்படடது. அங்கு அழியாது நின்ற பல கட்டிடங்கள் பின்னர் அழிக்கப்பட்டுள்ளன. கிளிநொச்சி இன்று வேறு ஒரு வடிவத்தை பெற்றிருக்கிறது. அபிவிருத்திகளும் பழைய அடையாளங்களை அழிக்கும் வித்திலேயே நடக்கின்றன.
புதிதாக எழுப்பப்பட்டுள்ள இராணுவமுகாங்களும் புத்தர்சிலைகளும் நிலத்தின் அடையாளத்தை இழக்கப் பண்ணுகின்றன. அவை மக்களின் நம்பிக்கை மற்றும் பண்பாட்டில் பாரிய தாக்குதல்களைச் செலுத்துகின்றன. சிங்கள மொழியிலான அறிவிப்புப் பெயர்ப்பலகைகள் முதல் பல்தேசியக் கம்பனிகளின் விளம்பரப் பலகைகள்வரை தமிழ்மொழியை தாக்கி அழிக்கிறது. வன்னியில் பெரும்பாலான இடங்களில் பழைய நினைவுகளை அழிக்கும் நடவடிக்கை மிகவும் திட்டமிட்ட வகையில் பல வழிகளில் மேற்கொள்ளப்படுகிறது.
நினைவுகளை அழிக்கும் நடவடிக்கையில் மாவீரர் துயிலும் இல்லங்களை அழித்த நடவடிக்கைகள் அதிகம் மக்களை பாதித்து. கடந்த முப்பதாண்டு காலப் போராட்டத்தில் போருக்குச் சென்று உயிரை மாய்த்த போராளிகளின் கல்லறைகள் மக்களிடத்தில் உணர்வு பூர்வமாக முக்கிய இடத்தை பெறுகின்றன. அரசாங்கத்திற்கும் இராணுவத்திற்கும் அவைகள் பயங்கரவாதிகளின் கல்லறைகளாய் தெரியக்கூடும். ஆனால் அரசின் நடவடிக்கையை எதிர்த்து ஈழ அரசியலுக்காக அந்தப் போராளிகள் போரிட்டு மாண்டவர்கள் என்பதைவிட அவர்களைப் பெற்றவர்களுக்கு அந்தக் கல்லறைகள்தான் பிள்ளைகள். மாவீரர் துயிலும் இல்லங்கள அழிக்கும் நடவடிக்கை ஈழத்து மக்களிடத்தில் கடுமையான துயரத்தால் எதிர்ப்புணர்வை உருவாக்கியிருக்கிறது.
கிளிநொச்சியை கைப்பற்றியவுடனேயே கிளிநொச்சி துயிலும் இல்லத்தை இராணுவத்தினர் அழித்தார்கள். இறந்த போராளிகளின் கல்லறைகள் அமைக்கப்பட்டிருந்த இடங்களை புல்டோசரால் கிளறி போட்டார்கள். சில இடங்களில் கல்லறைகள் புதைக்கப்பட்ட துயிலும் இல்ல மண்ணை கிளறி அள்ளிக் கொண்டு சென்று எறிந்தார்கள். மாவீரர் துயிலும் இல்லம் அமைக்கப்பட்ட இடங்களில் படையினர் படைமுகாம் அமைத்து இருக்கிறார்கள். கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லம் இருந்த இடத்தில் கல்லறைகள் அழிக்கப்பட்டு யாழ் படையினரின் படைத்தளம் அமைக்கப்பட்டிருக்கிறது. இல்லங்களைப் போலிருந்த பல துயிலுமில்லங்கள் அழித்து காடுகளாக்கப்பட்டள்ளன.
கல்லறைகளில் விதைக்கப்பட்டவர்களின் உறவுகளுக்கு இதைப் பார்க்கும் பொழுது எப்படியிருக்கும்? தங்கள் பிள்ளைகளின் சிதை மேனியில் முகாம் அமைத்திருப்பதைப்போலவே இருக்கும். இடித்தழிக்கப்பட்ட மாவீரர் இல்லங்களைப் பார்த்து பெற்றோர்கள் அழுகிறார்கள். தெருக்களால் செல்லும் பொழுதெல்லாம் அவர்கள் புலம்புகிறார்கள். தங்கள் மனதிற்குள் நினைவைக் கொண்டு வந்து துடிக்கிறார்கள். இடித்துடைக்கப்பட்ட மாவீரர் துயிலும் இல்லங்கள் எல்லா மக்களையும் வலியோடு பார்க்கத் தூண்டுகிறது. இந்தச் சிதைப்பு ஈழத்து மக்களிடத்தில் முடிவற்ற வலியையும் எதிரப்பையும் உருவாக்குகிறது.
மாவீரர் துயிலும் இல்லங்கள் என்பது முப்பதாண்டு கால போராட்டத்தில் போரில் மாண்டவர்களின் கதைகள் புதைக்கப்பட்ட நிலம். ஈழத் தமிழர்களின் வரலாறு எழுதப்பட்ட சுவர்கள். இந்தத் தடயங்களை அழிக்கும் பொழுது அது ஒட்டுமொத்த ஈழத்து மக்களையும் அது உலுப்புகிறது. போராட்டத்தின் முடிவற்ற தொடர்ச்சியான உணர்வை வழங்கும் நிலம் அது என்பதனாலேயே இராணுவத்தினர் அதை விரைவாக அழித்து முடித்தனர். இறந்தவர்களை பகைமறந்து மரியாதை செலுத்தும் இராணுவப் பண்பின்றி கொடிய குணம் கொண்டவர்கள் உயிரோடு இருந்தவர்களை சிதைத்ததுபோலவே ஆண்டாண்டாய் இறந்து புதைத்தவர்களையும் சிதைத்துள்ளனர். இது மாபெரும் இல்லாதொழிப்பாக இன அழிப்பாக நிகழ்த்தப்பட்டுள்ளது.
இருந்தவர்களும் இல்லை., இறந்தவர்களும் இல்லை., என்ற துயரத்தை தருகிறது. இந்த பூமியில் பிறக்கும் மக்கள் தங்கள் பிறப்பின் அடையாளத்தை நிறுவுவதுடன் இறப்பின் பொழுது அதை வலுவாக நிறுவுகிறார்கள். மனித வாழ்க்கையில் வாழ்தலின் அடையாளத்தை பதித்துச் செல்ல பலவற்றை பூமியில் விட்டுச் செல்கிறார்கள். ஈழத்தில் வாழ்வதற்காகவும் அதன் அடையாளங்களுக்காகவும் போராடிய மக்கள் உருவாக்கிய போராட்டத்தின் அடையாளங்களும் அழிக்கப்பட்டிருக்கின்றன.
ஈழத்தில் மாபொரும் மனிதர்கள் வாழ்ந்தமைக்கான எந்தத் தடையங்களுமின்றி இல்லாமல் போயிருக்கிறார்கள். அவர்கள் இந்த பூமியில் வந்து சென்றதற்கு எந்த தடையங்களுமில்லை. அவர்கள் பிறப்பின் தடயங்களையும் இறப்பின் தடையங்களையும் இழந்திருக்கிறார்கள். ஈழத்து மக்களின் தடையங்கள் ஏதும் பூமியில் தங்கக் கூடாது என்ற நோக்கத்தில் அவை அழிக்கப்படுகின்றன. வாழ்வும் இனமும் அழிக்கப்படுகிறது. ஈழ அரசியலையும் ஈழ உணர்வையும் இல்லாமல் செய்து பேரினவாத அரசியலை விரிக்க நினைக்கும் அரசு அதற்காக அந்த உணர்வோடும் அந்த அரசியலோடும் வாழும் மக்களை இல்லாமல் செய்கிறது. அதை மிகவும் திட்டமிட்டு தடயங்களின்றி செய்து முடிக்கிறது.
பூமியில் மனிதர்கள் பிறந்து இறந்து போகிறார்கள். வாழ்வில் அவர்கள் உருவாக்கும் தடயங்கள் அவர்களின் எல்லா கூறுகளையும் வெளிப்படுத்துகிறது. போர்க்கால மக்கள் நிறையப் பொருட்களை இழந்திருக்கிறார்கள். சொத்துக்கள் குவியல் குவியலாக அழிக்கப்பட்டிருக்கின்றன. யுத்தம் காரணமாக விட்டுச் செல்லப்பட்ட பொருட்கள் பலவும் யுத்த களத்தில் அழிக்கப்பட்டிருக்கின்றன. அவை களவாடி வேறு இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்ட பண்பாட்டுக் கொள்ளைகளும் வன்னியில் இடம்பெற்றிருக்கிறது. மக்கள் புழங்கும் பொருட்கள் காலத்தையும் வாழ்வையும் வரலாற்றையும் இன்னும் பலவற்றையும் நமக்கு நினைவு படுத்துகிறது. அவற்றை ஈழ மக்கள் இழந்துவிட்டார்கள்.
வன்னியில் ஆட்கள் கொல்லப்பட்டு இல்லாமல் செய்யப்பட்ட பொழுது அவர்களின் பொருட்களும் இல்லாமல் போயிருக்கின்றன. வன்னியில் அழிந்த பொருட்களில் சுமார் நூற்றுக்கணக்கான ஆண்டுகள் பாவிக்கப்பட்ட பொருட்கள் அழிந்திருக்கின்றன. ஏதுவுமற்று நிராயுதபாணிகளாய் மக்கள் சரணடைந்திருக்கிறார்கள். யுத்தம் வன்னி மக்களிடத்தில் எல்லாவற்றையும் பறித்திருக்கிறது. இன்றைய வன்னியின் அடையாளமென்பது மக்கள் வாழ்ந்த தனித்துவமான வீடுகளை எல்லாம் அழிக்கப்பட்டு ஒரே வடிவமைப்பைக் கொண்ட வீட்டுத்திட்ட வீடுகளும் கூடாரங்களுமாகியிருக்கிறது. வன்னின மக்கள் பாவிக்கும் பொருட்கள் எல்லாம் இடம்பெயர்ந்த மக்களுக்கு வழங்;கப்பட்ட அகதிப் பொருட்களாகியிருக்கிறது. இது மபெரும் இழப்பும் அடையாள அழிப்புமே.
போரில் இழந்த நினைவுகளில் புகைப்படங்கள் மீட்க முடியாதவை. பலரது புகைப்பட அலப்பங்கள் அழிந்து விட்டன. மக்களின் வாழ்க்கையில் நடந்த நிகழ்ச்சிகளின் நினைவுகளை அதனால் இழந்து விட்டார்கள். தங்களுடன் வாழ்ந்த சக மனிதர்களின் முகங்களை மக்கள் இழந்து விட்டார்கள். அவற்றை எப்படி மீளப் பெறுவது? உடையார்கட்டைச் சேர்ந்த ஒரு பெண் தனது தந்தை கொல்லப்பட்டு சில நாட்களில் அவரது புகைப்படத்தை வைத்திருந்த சகோதரனும் இறந்து விட்டார் என்றார். சகோதரன் உயிருடன் இருந்தால் தந்தையின் புகைப்படத்தை புதைத்து வைத்த இடத்தில் பெறலாம் என்றார். இப்பொழுது தந்தையும் இல்லை. சகோதரனும் இல்லை. அவர்களின் நினைவாக புகைப்படங்களும் இலலை. யாருமில்லாமல் எதுவுமில்லாமல் நினைவு அழிந்திருக்கிறது.
போருக்குச் சென்று மாண்ட பிள்ளையின் கல்லறைகள் அழிக்கப்பட்ட பொழுது அந்த பிள்ளைகளின் புகைப்படங்களும் போரில் அழிந்திருக்கின்றன. தங்களின் பிள்ளைகளின் எந்தத் தடயங்களுமின்றி அவர்களது முகமின்றி இருத்தல் எவ்வளவு கொடியது? போர் குறிப்பிட்ட காலத்தின் நினைவுகள் பலவற்றை அழித்திருக்கிறது. இடப்பெயர்வுகளில் பல நினைவுத்தடயங்கள் அழிந்திருக்கின்றன. யாழ்ப்பாண இடப்பெயர்வில் கணிசமான பழம் பொருட்கள் அழிந்துவிட்டன. இன்றை காலணியப் பொருட்களை பாவிக்க முன்னர் யாழப்பாணப் பண்பாட்டுடன் மிக நெருக்கமாக பாவிக்கப்பட்ட மக்களின் பல பொருட்கள் இன்று இல்லை. போரில் பாதிப் பொருட்கள் அழிய மீதியை காலணியப் பொருட்கள் அழித்துவிட்டன. இது இனத்தை மிகவும் பாதிக்கிறது.
பழைய இலக்கியங்களில் சொல்லப்பட்ட வருணனையின் அடிப்படையில் கடவுள்களினதும் காலத்தால் முந்திய படைப்பாளிகளினதும் முகங்களை வரைவது போல நம்முடன் வாழ்ந்த சக மனிதர்களின் உருவங்களை வரைந்து கொள்ள வேண்டிய நிலை வந்துவிட்டது. வளர்ச்சி மிக்க இன்றைய உலகத்தில் இப்படி நினைவுகளை மீட்டிப் பார்க்க வேண்டியிருக்கிறது. நினைவுகளை மீட்க முடியாமலும் போயிருக்கிறது. புலம்பெயர்ந்த மக்களிடத்தில் பழம் பொருட்களை சேமிக்கும் பழக்கம் உருவாகியிருக்கிறது. யாழ் நூலகத்தை அழித்த பிறகு ஏற்பட்ட அனுபவத்தால் ஈழத் தமிழர்களின் புத்தகங்கள் பலவும் இணையங்களில் புத்தகங்களாகவே சேகரிக்கப்பட்டிருக்கின்றன. நான்காம் ஈழப்போரின் முக்கிய ஆவணங்கள் பலவும் வெளிவந்து சேகரிக்கப்பட்டிருக்கின்றன.
வன்னி யுத்தத்தில் அங்கு வெளியான புத்தகங்களும் வெளியான பத்திரிகைகளும் இதழ்களும் திரைப்படப் பிரதிகள் ஆணவப்படங்கள் என்பனவும் அழிந்திருக்கின்றன. போர் தொடர்ச்சியாக நடந்த ஒரு பகுதியில் நடைபெற்ற நிகழ்வுகளின் தடையங்கள் பல அழிந்துள்ளன. வன்னியைச் சேர்ந்த படைப்பாளிகள் பலரும் தங்கள் படைப்புக்களை போரில் இழந்திருக்கிறார்கள். இழந்த அந்தப் படைப்புகளிலிருந்து அல்லது ஆவணங்களிலிருந்து அறியப்படவேண்டிய செய்திகளும் விடயங்களும் இன்று இழக்கப்பட்டுள்ளன. குறிப்பாக போராளிப் படைப்பாளிகள் பலரது பதிவுகள் படைப்புக்கள் அழிந்துள்ளன. வன்னிப் போரில் இழந்தவற்றில் இது மீளப் பெற முடியாதவை.
நினைவை அதன் தடையங்களை அழிப்பது என்பது புலிகளின் அடையாளங்களை அழிப்பதுடன் நிற்பதில்லை. அந்த நோக்கத்திற்கு அப்பால் அது செல்கிறது. யாழ்ப்பாணத்தில் உள்ள மில்லர் சிலை அழிக்கப்பட்டதுபோல எம்.ஜி.ஆர் சிலையும் அழிக்கப்பட்டது. தந்தை செல்வாவின் சிலையும் அழிக்கப்படடது. வன்னியில் மாலதி சிலை, குட்டிசிறி சிலை உட்பட பல போராளிகளின் சிலைகள் அழிக்கப்பட்டதுடன் பண்டாரவன்னியனின் சிலையும் அழிக்கப்பட்டது. இவை புலிகளின் அடையாளகள் புலிகள் காலத்து அடையாளங்கள் என்பதைத்தாண்டி ஈழத் தமிழரின் அடையாளங்களாகவே அழிக்கப்படுகின்கின்றன.
யாழ்ப்பாணத்தில் சமாதான காலத்தில் கட்டப்பட்ட எல்லா நினைவுத் தடையங்களும் மீண்டும் அழிக்கப்பட்டிருக்கின்றன. உடைந்த தலைகளை ஒட்டுவைப்பதுடன் நினைவை அழிக்கும் அரசியல் முடிந்து போகுமா? உடைக்கப்பட்ட சிலைகளை மீள புனரமைப்பதுடன் இந்த நடவடிக்கை நிறுத்தப்படுமா? அவை அழிக்கப்பட்டு அழிக்கப்பட்டு கட்டப்படுகையில் அந்த நினைவுத்தடங்களின் காலம் கொல்லப்டுகிறது. நினைவை அழிக்கும் அரசியல் என்பது ஈழத் தமிழர்களின் வாழ்வு, வரலாறு, பண்பாடு, உளவியல், புவியல், மொழி என்று எல்லாவற்றின்மீதும் தாக்கிக் கொண்டிருக்கிறது.
இவை எல்லாவற்றையும் அழிக்கும் பொழுது ஏற்படும் இருப்பு பற்றிய பயத்தைவிடவும் புதிதாக நிறுவப்படும் புத்தர் சிலைகளும் இராணுவ நினைவுத் தூபிகளுமே பெரும் அபாயத்தை உருவாக்குகின்றன. எதிர்காலத்தைப் பற்றிய நம்பிக்கையீனங்களை உருவாக்குவதுடன் நிகழ்காலத்தில் பயத்தையும் தருகிறது. லட்சக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டு அநீதித்தனமாக நடத்தப்பட்ட போரை நடத்திய இராணுவத்தின் நினைவுத் தூபிகளின் வீரம் செறிந்த கதைகளாhக போரில் சிக்கி தவித்து மீண்டு சாட்சியங்களாய் மக்கள் வாழும் பொழுதே எழுதுபவர்கள், இந்தக் காலத்திலேயே மக்களின் இருப்பை கேள்விக்குள்ளாக்கி அரசியல் செய்யபவர்கள், எதிர்காலத்தில் இந்த நிலத்திற்கு எத்தகைய ஆபத்தை கொண்டு வரப் போகிறார்கள் என்பதும் எதிர்கால சந்ததியில் அது மிகப்பெரிய அச்சுறுத்தலாய் மூடப்போகிறது என்பதும் மிகவும் அபாயமானது.
தொகுப்பு . கஜன்
No comments:
Post a Comment